மணிஷ் சிசோடியா விவகாரம்: தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
புதுடெல்லி,
மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரான நிலையில் அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவனியூ சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, மணிஷ் சிசோடியா தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.
இந்நிலையில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இன்று மாலை நடைபெற்ற விசாரணையின் போது, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடாமல் ஏன் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய வேண்டும்? இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என மணிஷ் சிசோடியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.