சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம் மக்களுக்கான இடஒதுக்கீடு ரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2023-04-14 21:05 GMT

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசை கண்டித்துள்ளது. சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்து ஓட்டுகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில அரசு இத்தகைய முடிவை எடுத்தது. இந்த விஷயத்தில் கர்நாடக அரசு எடுத்துள்ள முடிவு தவறான எண்ணத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தில் கர்நாடக அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் கல்வியில் மட்டும் பின்தங்கி இருப்பதாக சின்னப்பரெட்டி ஆணையம் கூறியுள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது. இது தவறான தகவல். அந்த ஆணையம், முஸ்லிம்கள் சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளது. எந்த விதமான ஆய்வையும் நடத்தாமல், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது, அரசியல் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.

இடஒதுக்கீடு குறைந்துவிடும்

மாநில அரசின் இந்த முடிவு ரத்தானால், லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு குறைந்துவிடும். ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்தினால் மட்டுமே அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீட்டை பகிர்ந்து அளிக்க முடியும். மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது என்று சுப்ரீம் கோாட்டு தீர்ப்பு கூறியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கண்கெடுப்பு அறிக்கை அரசிடம் உள்ளது. அதன்படி இடஒதுக்கீட்டை உயர்த்தினால் அதை கோர்ட்டும் ஏற்றுக்கொள்ளும். அதனால் மொத்த இடஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசு அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்