அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2023-08-04 08:30 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 'மோடி' பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் ஐகோர்ட்டும்  தள்ளுபடி செய்தது.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில்  நீதிபதிகள் பி.ஆர். கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

வழக்கில் சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

"அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது;

இந்த வழக்கில் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா?

ஒரு ஆண்டு 11 மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

மேலும் பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் மூலம் ராகுல் காந்தி குற்றவாளி என்ற கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் அவர் எம்.பி.யாக தொடர்கிறார், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்