சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை - முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பு...!

தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் தலைமையில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் இணைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

Update: 2022-08-26 05:33 GMT

புதுடெல்லி,

இந்திய நீதித்துறையில் உச்சபட்ச நீதிமன்றமாக சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா செயல்பட்டு வருகிறார். அவர் சுப்ரீம் கோர்ட்டில் 48-வது தலைமை நீதிபதியாவார். 2021 ஏப்ரல் மாதம் 21-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்துள்ளார்.

இதனிடையே, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது. சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் இன்று விசாரிக்கும் வழக்குகள் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இதை https://webcast.gov.in/events/MTc5Mg-- என்ற இணையதளத்தில் காணலாம். சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் அடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யுயு லலித் உள்ளிட்ட நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கும் வழக்கு, பெகாசஸ் உள்பட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் தலைமையில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் இணைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்