லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம்: ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமீன்

லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய 4 விவசாயிகள் கார் மோதி உயிரிழந்த சம்பவத்தில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 8 வார இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-25 06:39 GMT

புதுடெல்லி,

கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி காலை வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய மந்திரிக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் மந்திரியின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி சம்பவ் இடத்திலேயே இறந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.

மந்திரியின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா கூறி வந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதுடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். சிறப்பு புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த அந்த 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 'லக்கிம்பூர் கேரி சம்பவம் விபத்து கிடையாது. நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தால் செய்யப்பட்ட கொலை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதால் ஆஷிஸ் மிஸ்ரா சிறையில் இருந்து வெளிவந்தார்.

இந்தநிலையில், அந்த உத்தரவுக்கு எதிராக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்

சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது விபத்தில் விசாரிக்கவில்லை என்று கூறி, ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்தது.

அவருக்கு ஜாமீன் அளிப்பதற்கு முன், தங்கள் தரப்பை தெரிவிக்க இறந்தோரின் குடும்பத்தினருக்கு போதிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அலகாபாத் ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து லக்கீம்பூர் கெரி மாவட்ட சிறையில் ஆசிஷ் மிஸ்ரா அடைக்கப்பட்ட நிலையில் அவரின் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு மீண்டும் விசாரித்தது. அவர் அரசியல் செல்லாவாக்கு மிக்கவர் என்பதால் சாட்சியங்களை கலைக்க கூடும் என்று கூறி கடந்த ஜூலை 26-ம் தேதி ஆசிஷின் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதனைதொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு

மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 8 வார இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 8 வார இடைக்கால ஜாமீன் காலத்தில் உத்தர பிரதேசத்திலோ, டெல்லியிலோ ஆஷிஷ் மிஸ்ரா தங்கி இருக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்