8 ஆயிரம் டன் சரக்குடன் கடலில் மூழ்கிய கப்பலில் டீசல் கசிவை அகற்றும் பணி தொய்வு

8 ஆயிரம் டன் சரக்குடன் கடலில் மூழ்கிய கப்பலில் டீசல் கசிவை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த பணி முழுமையாக நிறைவடைய அடுத்த மாதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-07-18 15:35 GMT

மங்களூரு;

கடலில் மூழ்கியது

மலேசியா நாட்டில் இருந்து 8 ஆயிரம் டன் இரும்பு சரக்குகளுடன் `எம்.வி.பிரின்ஸ்' என்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் லெபனான் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த கப்பலில் எரிெபாருளுக்கு தேவையான 220 டன் டீசல் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த சரக்கு கப்பலில் சிரியா நாட்டை சேர்ந்த 15 மாலுமிகள் பயணித்து வந்தனர்.

இந்த நிலையில் கப்பல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புதிய துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் சென்றபோது திடீரென பழுதாகி நின்றது.

இதனால் கப்பலில் விரிசல் ஏற்பட்டு கடல்நீர் உள்ளே புகுந்தது. இதனால் கப்பலில் இருந்த 15 மாலுமிகளும் சிக்கி தவித்தனர். இதுபற்றி மங்களூரு புதிய துறைமுக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த விபத்து பற்றி கூறினர்.

இதையடுத்து கடலோர காவல் படையினர் 15 மாலுமி களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து காப்பகத்தில் சேர்த்தனர். சரக்கு கப்பலை மீட்கவில்லை.

பணி தொய்வு

இந்த நிலையில் கப்பல் சிறிது, சிறிதாக மூழ்க தொடங்கியது. இறுதியாக கப்பலின் பெரும்பாலான பகுதி கடலுக்கு அடியில் மூழ்கியது. இதற்கிடையே கப்பலில் இருந்து டீசல் கசிய தொடங்கியது.

அதனை தடுக்க மங்களூரு துறைமுக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் டீசல் கசிவை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அந்த கப்பலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கடலில் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கப்பலில் உள்ள டீசலை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவரம் அடைந்துள்ள நிலையில், கடல் சீற்றமாக உள்ளது. இதனால் கப்பலில் இருந்து டீசல் அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி முழுமையாக நிறைவடைய அடுத்த மாதம் (ஆகஸ்டு) ஆக வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்