அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை; சுமலதா எம்.பி. பேட்டி

எஸ்.எம்.கிருஷ்ணாவை திடீரென்று சந்தித்து பேசிய சுமலதா எம்.பி, அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-04 18:45 GMT

பெங்களூரு:

எஸ்.எம்.கிருஷ்ணாவை திடீரென்று சந்தித்து பேசிய சுமலதா எம்.பி, அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் சந்திப்பு

பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை, நடிகையும், சுயேச்சை எம்.பி.யுமான சுமலதா நேற்று திடீரென்று சந்தித்து பேசினார்.

அப்போது மண்டியா அரசியல் நிலவரம் குறித்து அவருடன், சுமலதா ஆலோசித்ததாகவும் கூறபபடுகிறது.

பின்னர் சுமலதா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முடிவு எடுக்கவில்லை

எஸ்.எம்.கிருஷ்ணாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி இருந்தேன். அவர் மண்டியா மாவட்டத்தின் மூத்த தலைவர் ஆவார். எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு 2-வது முறையாக சிறந்த குடிமகனுக்கு விருது கிடைத்திருந்தது. இதற்காக அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.

மண்டியா மாவட்ட சுயேச்சை எம்.பி.யாக 4 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நான் அரசியல் கட்சிகளில் சேருவதாக இருந்திருந்தால், எம்.பி.யான 6 மாதத்திலேயே சேர்ந்திருப்பேன். 4 ஆண்டுகளாக மண்டியா அரசியல் நிலவரங்களை கவனித்து வருகிறேன்.

ஆலோசித்து முடிவு

பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதுபற்றி அனைவருடனும் ஆலோசித்து தான் முடிவு எடுப்பேன். நாடாளுமன்றம் மற்றும் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதுபற்றி எந்த மாதிரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை ஆலோசித்து எடுப்பேன்.

அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. என்னுடைய லாபம், நஷ்டத்தை பார்த்து முடிவு எடுக்க மாட்டேன். என்னுடன் இருப்பவர்கள் பற்றி யோசித்து சரியான முடிவு எடுப்பேன். மண்டியாவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். இதற்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவுடனான சந்திப்புக்கும் தொடர்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்