கேரளாவில் கடந்த ஆண்டு 9,549 பேர் தற்கொலை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கேரளாவில் கடந்த ஆண்டு 9,549 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2022-09-13 00:18 GMT

பெரும்பாவூர், 

கேரளாவில் கடந்த ஆண்டு 9,549 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பெண்களை விட ஆண்கள் அதிகம் பேர் தற்கொலை செய்தனர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலக தற்கொலை தடுப்பு தினமாக நேற்று அனுசரிக்கப்பட்டது. கேரளாவில் கடந்த ஆண்டு 2020-2021-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களை ஆய்வு செய்துவரும் பிரபல மனோதத்துவ நிபுணரும், இந்திய மருத்துவக் கழகத்தின் மனநல கமிட்டி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பீ.என்.சுரேஷ்குமார் வெளியிட்டார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,416 பேர் தற்கொலை செய்துகொண்டனர். மாநிலத்திலேயே அதிக தற்கொலை நிகழ்ந்தது திருவனந்தபுரம் மாவட்டமாகும். இதில் ஒரு லட்சம் நபர்களுக்கு, 42 பேர் வீதம் தற்கொலை செய்தனர். மிகவும் குறைந்தளவு தற்கொலை நிகழ்ந்தது மலப்புரம் மாவட்டம் ஆகும். அங்கு 535 பேர் தற்கொலை செய்து உள்ளனர். ஒரு லட்சம் நபர்களில், 11.2 கேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கொல்லம் மாவட்டம் 1,068 பேர், வயநாடு மாவட்டத்தில் 323 பேர், இடுக்கி மாவட்டத்தில் 407 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 907 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 626 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 331 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 927 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 881 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 677 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 492 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 305 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 652 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். கேரளாவில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்தம் 9,549 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இது ஒரு லட்சம் நபர்களில், 27.2 பேர் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-2020-ம் ஆண்டில் 8,500 பேர் என் ஆய்வுகளில் தெரியவருகிறது. 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 21.30 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு 14 வயதுக்கு கீழ் தற்கொலை செய்துகொண்டோர் 77 பேர், 15 முதல் 29 வயது வரை 1,932 பேர், 30 முதல் இருந்து 45 வயதுக்கு இடையே உள்ள 2,317 பேர், 46 முதல் 59 வயது வரை உள்ள 2,659 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,558 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

மேலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் பேர் தற்கொலை செய்தனர். 78.4 சதவீதம் பேர் தூக்குப்போட்டும், 9.4 சதவீதம் பேர் விஷம் குடித்தும், 3.9 சதவீதம் பேர் தீக்குளித்தும், 4.9 சதவீதம் பேர் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்