கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூரு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஆவலஹள்ளி:
பெங்களூரு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
கல்லூரி மாணவர் தற்கொலை
கோலார் மாவட்டம் சீனிவாசபுராவை சேர்ந்தவர் ஸ்ரீநாத்(வயது 25). இவர், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி-பார்ம் படித்து வந்தார். கே.ஆர்.புரம் அருகே ஹிரன்டஹள்ளியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ஸ்ரீநாத் கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் படித்து வந்தாலும், உடற்பயிற்சி செய்வதில் ஸ்ரீநாத் ஆர்வம் காட்டி வந்தார்.
கட்டுப்கோப்புடன் அவர் உடலை வைத்திருந்ததால், ஆணழகன் போட்டிகளிலும் பங்கேற்று வந்தார். நேற்று முன்தினம் ஸ்ரீநாத்துடன் தங்கி இருந்த மற்றொரு வாலிபர் வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீநாத் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரணம் என்ன?
வெளியே சென்றிருந்த நண்பர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது தான் ஸ்ரீநாத் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக ஆவலஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீநாத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். ஸ்ரீநாத் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. ஸ்ரீநாத் தற்கொலை குறித்து, அவரது பெற்றோர் மற்றும் வீட்டில் உடன் தங்கி இருந்த நண்பரிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து ஆவலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.