கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம்
கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, மைசூருவில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பிரதமர் மோடி வருகிறார்
பெங்களூரு, மைசூருவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். இதையொட்டி பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படியே பிரதமர் மோடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதை கர்நாடக அரசும் உறுதி செய்துள்ளது.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11.55 மணிக்கு பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்திற்கு வருகிறார்.
அடிக்கல் நாட்டுகிறார்
12 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய அறிவியல் கழகத்திற்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் அங்கு பகசி பார்த்தசாரதி ஆஸ்பத்திரி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார்.
அதன் பிறகு பிரதமர் மோடி நாகரபாவிக்கு சென்று அம்பேத்கர் பொருளாதார பல்கலைக்கழகத்தையும், அம்பேத்கர் சிலையையும் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு தரம் உயர்த்தப்பட்ட 150 தொழிற்பயிற்சி நிலையங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
அதன் பிறகு அவர் அங்கிருந்து கெங்கேரியில் உள்ள கொம்மகட்டா பகுதிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்கும் அவர், மேம்படுத்தப்பட்ட நவீன பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தை திறந்து வைக்கிறார். பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.7,231 கோடி மதிப்பீட்டிலான 6 நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய அரசின் திட்டங்கள்
அந்த விழாவை முடித்து கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு மகாராஜா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயிற்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு அதே மேடையில் மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். பிறகு சுத்தூர் மடத்தில் அமைக்கப்பட்டுள்ள வேத பாடசாலையை திறந்து வைக்கிறார். பின்னர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அதன் பிறகு மைசூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) உலக யோகா தினத்தையொட்டி மைசூரு அரண்மனை வளாகத்தில் யோகா பயிற்சியில் கலந்து கொள்கிறார். பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் மைசூருவில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மைசூரு, பெங்களூருவில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
சந்தேக நபர்கள்...
மைசூரு, பெங்களூருவில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். சிலரை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மைசூரு, பெங்களூரு நகரங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் பாதுகாப்புகளை அதிகப்படுத்த போலீசார் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக பெங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி முதலில் கொம்மகட்டாவுக்கு சென்று அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறநகர் ரெயில் திட்டத்தையும், பிற திட்டங்களையும் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டு இருந்தது.
திடீர் மாற்றம்
அதன்பின்னர் அவர் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மாலை 4.50 மணியளவில் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு புறப்பட்டு செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் தற்போது திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.