சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- மந்திரி தினேஷ் குண்டுராவ் பேச்சு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுதந்திர தினவிழாவில் மந்திரி தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-15 21:01 GMT

மங்களூரு:-

சுதந்திர தினவிழா

நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல், கர்நாடக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவிலும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், சுகாதாரத்துறை மந்திரியுமான தினேஷ் குண்டுராவ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்று கொண்டார். இதையடுத்து அங்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் சாதனை புரிந்தவர்களுக்கு மந்திரி தினேஷ் குண்டுராவ் வாழ்த்து சான்றிதழ்களும் வழங்கினார்.

கடும் நடவடிக்கை

இதையடுத்து நடந்த விழாவில் மந்திரி தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர மாவட்டத்தில் மக்களின் அமைதியை கெடுக்க நினைப்பவர்களை கண்டறிந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். மாவட்டத்தில் அமைதி நிலைநாட்டப்படும்.

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 5 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தோம். தற்போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் 4 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். மீதமுள்ள ஒரு வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும். மக்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி பாடுபட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்கள் சந்தோஷமாக இருப்பதை பார்க்க முடிகிறது. நாங்கள் அமல்படுத்தி உள்ள உத்தரவாத திட்டங்களால் ஏழை மக்கள் பணத்தை சேமிக்க முடிகிறது.

இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் கலெக்டர் முல்லை முகிலன், போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார் ஜெயின், போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உடுப்பி

இதேபோல் மற்றொரு கடலோர மாவட்டமான உடுப்பியிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. உடுப்பி டவுன் அஜர்காடு மகாத்மா காந்தி மைதானத்தில் நடந்த விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார்.

இந்த விழாவில் கலெக்டர் வித்யாகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா, மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி பிரசன்னா, கூடுதல் கலெக்டர் மம்தா, உடுப்பி எம்.எல்.ஏ. யஷ்பால் சுவர்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்