மண்டியாவில் நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது: பெங்களூருவில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
மண்டியாவில் நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கியதால் பெங்களூருவில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கனமழை கொட்டித்தீர்த்தது
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. அதே போல் மண்டியா மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த மாவட்டத்தில் மலவள்ளி தாலுகா டி.கே.ஹள்ளியில் பெங்களூருவுக்கு குடிநீர் கொண்டு வரப்படும் நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்து மின் மோட்டார்கள் நீரில் மூழ்கியது. இதனால் நீரேற்றும் பணி தடைப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் முதல்-மந்திரிக்கு தகவல் தெரிவித்தனர். முதல்-மந்திரியின் உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் அந்த நிலையத்திற்கு நேரில் சென்று தேங்கி இருந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டன. காலை 9 மணியில் இருந்து மாலை வரை மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது.
குடிநீர் வினியோகம் நிறுத்தம்
10-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் மழைநீரில் மூழ்கியதால் நீரேற்றும் பணி நின்றது. இதன் காரணமாக பெங்களூரு நகரில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் இன்று குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. நாளையும் (செவ்வாய்க்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. அதனால் நகர மக்கள் குடிநீருக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.