இளம்பெண் மர்ம மரணம், உடல் புதைப்பு; காதலன் கரும்புதோட்டத்தில் பிணமாக மீட்பு - ஆணவக்கொலை? அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்த இளைஞன் டிரைவராக வேலை செய்த வீட்டை சேர்ந்த இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்ததும் அவரது உடலை பெற்றோர் யாருக்கும் தெரியமல் அடக்கம் செய்ததும் தெரியவந்தது.

Update: 2022-08-29 05:47 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டம் ரவ்ட்ஹலி என்ற கிராமத்தை சேர்ந்த பிரசநாத் சவுதிரி நேற்று காலை அவரது கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, கரும்பு தோட்டத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்ட நபர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதான அங்கித் என்பது தெரியவந்தது.

கரும்புதேட்டத்தில் அங்கித் பிணமாக கிடந்த நிலையில் அவரது உடைகள் கலையப்பட்டுள்ளது. அவரது உடலில் காயங்கள் இருந்தன.

இதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அங்கித்தின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது தந்தையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கித் அதே கிராமத்தை சேர்ந்த முஜிபுல்லா என்பவரின் வீட்டில் டிராக்டர் வாகனம் ஓட்டிவந்ததும் தெரியவந்தது. அங்கித் முஜிபுல்லாவின் விவசாய நிலத்தில் டிராக்டர் வாகனத்தை இயக்கும் டிரைவராக வேலை செய்துவந்துள்ளார். முஜிபுல்லாவுக்கு இர்பான், இர்ஷத் என இரு மகன்களும், அமினா ஹொடூன் என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன் தினம் மாலை முஜிபுல்லாவின் மனைவி அங்கித்திற்கு போன் செய்து வேலைக்கு அழைத்ததாகவும், அதன் பின் அங்கித் வீடு திரும்பவில்லை என்றும் அங்கித்தின் தந்தை தெரிவித்தார். அங்கித்தின் செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அங்கித்தின் தந்தை தெரிவித்தார்.

இதையடுத்து, முஜிபுல்லாவின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முஜிபுல்லாவின் மகள் அமினாவிடம் விசாரணை நடத்த அவரை கூப்பிடுமாறு போலீசார் கேட்டுள்ளனர்.

ஆனால், அமினா நேற்று முன் தினம் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை அடக்கம் செய்துவிட்டதாகவும் அமினாவின் சகோதரர்கள் இர்பான், இர்ஷத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அமினா திடீரென உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடலை கிராமத்திற்கு வெளியே புதைத்துவிட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். விசாரணையில், முஜிபுல்லா வீட்டில் டிராக்டர் டிரைவராக வேலை செய்துவந்த அங்கித்தும், முஜிபுல்லாவின் மகள் அமினாவும் காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த காதலுக்கு அமினாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமினாவின் சகோதரர்களான இர்பான், இர்ஷத் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. எதிர்ப்பையும் மீறி அமினாவும், அங்கித்தும் காதலித்து வந்ததால் இளம்பெண்ணின் பெற்றோர், சகோதரர்கள் இருவரையும் ஆணவகொலை செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இருவரையும் ஆணவகொலை செய்துவிட்டு அமினாவின் உடலை ஊருக்கு வெளியே புதைத்துவிட்டு, அங்கித்தின் உடலை கரும்பு தோட்டத்தில் வீசி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி புதைக்கப்பட்ட அமினாவின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த காதலர்கள் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்