லட்சத்தீவு எம்.பியின் பதவிக்கு மீண்டும் சிக்கல்: சுப்ரீம் கோர்ட்டு கொடுத்த பரபரப்பு உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்த கேரளா ஐகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு இன்று ரத்து செய்துள்ளது.

Update: 2023-08-22 11:28 GMT

புதுடெல்லி,

லட்சத்தீவு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். கொலை முயற்சி வழக்கில் முகமது பைசலுக்கு லட்சத்தீவு கவரொட்டி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பைசல் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பைசல் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து லட்சத்தீவு லோக்சபா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் லட்சத்தீவு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதற்கு இடையில், முகமது பைசல் எம்.பி.க்கு கவரொட்டி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு கேரளா ஐகோர்ட்டு  தடை விதித்தது. இதனால் லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.

இந்த நிலையில், முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கேரளா ஐகோர்ட்டு நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. கேரளா ஐகோர்ட்டு  இந்த வழக்கில் 6 வாரங்களுக்குள் மறு ஆய்வு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் எம்.பி.யின் தண்டனையை நிறுத்தி வைப்பதில் ஐகோர்ட்டின் அணுகுமுறை "தவறானது" என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்