டெல்லியில் மாநில தகவல் தொழில்நுட்ப மந்திரிகள் மாநாடு: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
டெல்லியில் நடந்த மாநில தகவல் தொழில்நுட்ப மந்திரிகள் மாநாட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் டெல்லி பிரகதி மைதானத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப மந்திரிகளுக்கான மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
பின்னர் இதுதொடர்பாக நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஓராண்டு காலத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட டிஜிட்டல் தொடர்பான முன்னெடுப்புகளை மாநாட்டில் பலரும் பாராட்டினார்கள். இந்த மாநாடு மூலமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.டி. துறை எவ்வாறு செயல்படுகிறது? என்பதை கவனிக்க முடிந்தது. தமிழகத்தில் இன்னும் தீவிரமான புது உத்வேகத்துடன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு சாதாரண மக்களுக்கும் கிடைக்க முயற்சிகள் செய்வோம். மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில், கடலில் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பங்களை பார்வையிட்டோம். இதை தமிழகத்தில் செயல்படுத்த மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசி முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.
அதைப்போல மருத்துவத்துறையிலும் முயற்சிகள் எடுக்கப்படும். ஆளில்லா விமானங்களை (டிரோன்) விவசாயத்துக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், போலீஸ்துறையிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படும். தொழில்துறையில் ரோபோக்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை டிஜிட்டல் சேவையில் முதல் வரிசையில் வைக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் கனவை இந்த துறை நிச்சயம் நனவாக்கும் என்று அவர் கூறினார்.