ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழாவிற்கு 3 யானைகள் அனுப்பப்படுகிறது
மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழாவிற்கு 3 யானைகள் அனுப்பப்படுகிறது என வனத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
மைசூரு
மைசூரு தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும்.10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவை காண வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவார்கள். இந்த ஆண்டு தசரா விழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இந்தநிலையில் மைசூரு தசரா விழா போல் குடகு மாவட்டம் மடிகேரி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவிலும் தசரா விழா நடைபெறும். இந்த விழா கர்நாடக மாநிலத்தில் மைசூருவுக்கு அடுத்தப்படியாக பிரசித்தி பெற்றதாகும்.
ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா விழா நவராத்திரி நாட்களில் நடத்தப்படும். அதாவது விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக கொண்டாடப்படும்.
ஜம்பு சவாரி ஊர்வலம்
மன்னர்களின் கலாசாரப்படி பாரம்பரிய ஜம்பு சவாரி ஊர்வலம் ஸ்ரீரங்கப்பட்டாணாவில் நடக்கும். இந்த தசரா விழாவில் கலந்து கொள்ள மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து 3 யானைகள் ஸ்ரீரங்கப்பட்டனா தசரா விழாவில் கலந்து கொள்ள செல்கிறது.
அதாவது வருகிற 16, 17, 18, ஆகிய 3 நாட்கள் ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடைபெற இருக்கும் தசரா விழாவில் கலந்து கொள்வதற்காக மகேந்திரா, வரலட்சுமி, மற்றும் விஜயா என்ற 3 கும்கி யானைகள் அனுப்பப்படுகிறது.
வருகிற 15-ந்தேதி காலை லாரிகள் மூலமாக 3 யானைகளை அலங்காரப்படுத்தி மைசூரு அரண்மனை வளாத்தில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணாவிற்கு அனுப்பப்படுகிறது.
தங்க அம்பாரி
அங்கு நடைபெறும் தசரா விழாவில் மகேந்திரா யானை அம்பாரியை சுமக்கிறது. அங்கு யானை மீது சுமக்கும் அம்பாரி தங்க அம்பாரி அல்ல, தசரா நடத்துவதற்காக தயாரித்திருக்கும் 350 கிலோ எடையுள்ள மரத்தால் செய்த அம்பாரி. .
41 வயதான மகேந்திரா யானையின் அருகில் வரலட்சுமி, விஜயா பெண் யானைகள் நடந்து செல்லும்.
ஸ்ரீரங்கப்பட்டணா தசராவில் மகேந்திரா யானை 2-வது முறையாக அம்பாரி சுமக்க உள்ளது. "ஜம்பு சபாரி" ஊர்வலத்தை காண ஏராளமான மக்கள் குவிவார்கள். இந்த கூட்டத்தை பார்த்து கும்கி யானைகள் அஞ்சாமல் அம்பாரி சுமந்து நடக்கிறது.
அரண்மனை வளாகம்
தசரா நிகழ்ச்சி நடத்துவதற்கு ஸ்ரீரங்கப்பட்டணாவில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த தசரா விழா முடிந்தபின் மீண்டும் அந்த 3 யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்திற்கு கொண்டு விடப்படுகிறது என வனத்துறை அதிகாரி சவுரப் குமார் கூறினார்்.