பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ராஜினாமா
பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்பில் இருந்து விஜய்குமார் சின்கா ராஜினாமா செய்துள்ளார்.
பாட்னா,
பீகாரில் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் 243 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது மொத்தம் 241 இடங்கள். 2 இடங்கள் காலியாக உள்ளன. நிதிஷ்குமார் அரசுக்கு மொத்தம் 165 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இதனால் நிதிஷ்குமார் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில், சபாநாயகரான பாஜகவின் விஜயகுமாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆளும் ஜேடியூ-ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் கொடுத்தனர். முன்னதாக சபாநயகர் பொறுப்பில் இருந்து விலக மறுத்த விஜயகுமார், தனக்கு எதிரான தீர்மானத்தில் பதிலளிக்க விரும்புவதாக கூறினார். தொடர்ந்து, தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய விஜயகுமார், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து புதிய சபாநயகராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அவாத் பிஹாரி சவுத்ரி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.