கொரோனா உபகரண முறைகேடு குறித்து விரைவில் விசாரணை- கலெக்டர் சாருலதா சோமல் தகவல்
கொரோனா உபகரண முறைகேடு குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று கலெக்டர் சாருலதா சோமல் தெரிவித்துள்ளார்.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகரில் கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக மாநில அரசு சார்பில் மானியமாக ரூ.2.35 கோடி வழங்கப்பட்டது. இதில் ரூ.33.67 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அப்போதைய மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை அமைத்த அதிகாரிகள் கொரோனா பரவல் ஆரம்ப காலத்தில் இருந்து முடியும் வரை ஒதுக்கப்பட்ட மானியம், மற்றும் அந்த மானியத்தின் மூலம் வாங்கப்பட்ட பொருட்கள், நோயாளிகள் விவரங்கள் குறித்து விசாரித்தனர். பின்னர் அந்த அறிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் சாருலதா சோமலிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் நோயாளிகளின் வருகை பதிவு மற்றும் தினமும் உபயோகப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட மருத்துவ உபகரண விவரங்கள் குறித்து அறிக்கை கிடைத்துள்ளது.
இதில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகியிருக்கிறது. இதுதொடர்பாக கொரோனா காலக்கட்டத்தில் பொறுப்பு அதிகாரியாக இருந்த நாகராஜ் என்பவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் விடுமுறையில் உள்ளார். மேலும் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இதுதொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.