மோடிக்கு எதிரான அரசியல் வெறுப்பை, சிலர் இளைஞர்களுக்கு எதிரான சதியாக மாற்றுகின்றனர்- மத்திய மந்திரி பேச்சு
மோடிக்கு எதிரான தங்கள் அரசியல் வெறுப்பை, சிலர் இளைஞர்களுக்கு எதிரான சதியாக மாற்றுகின்றனர் என மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
மும்பை,
ராணுவத்திற்கு ஆள் சேர்க்க கடந்த 14-ந் தேதி 'அக்னிபத்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பல பகுதிகளில் ரெயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. தெலுங்கானாவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அக்னிபத் திட்டத்துக்கு எதிரான இளைஞர்கள் போராட்டம் பற்றி கூறியதாவது:-
சில குறுகிய மனம் கொண்டவர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான பைத்தியகாரத்தனமாக தங்களது அரசியல் வெறுப்பை, நாட்டில் நேர்மறையாக உள்ள இளைஞர்களுக்கு எதிரான சதியாக மாற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால் நாங்கள் என்ன விலை கொடுத்தாலும் அதுபோன்ற சதி திட்டம் வெற்றி பெற விடமாட்டோம். நாட்டின் இளைஞர் தங்களது எதிர் கால முன்னேற்றத்தை தடுக்கும் எந்த குழப்பத்திற்கும் இடம்கொடுக்க கூடாது. நாட்டில் நேர்மறையாக உள்ள இளைஞர்கள், அவர்களின் தேசப்பற்று மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.