மகனுக்கு மாவட்ட துணை தலைவர் பதவி வாங்கி கொடுத்த சோமண்ணா

பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பு

Update: 2023-03-29 23:01 GMT

பெங்களூரு:-

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக பா.ஜனதாவில் இருந்து விலக விரும்பும் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சமாதானம் செய்யும் முயற்சி நடந்து வருகிறது. அவர்களில் சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியும், வீட்டு வசதித்துறை மந்திரியுமான சோமண்ணாவும் ஒருவர்.

இவர் கடந்த சில மாதங்களாக தனது மகன் அருண் சோமண்ணாவை கட்சியில் சேர்த்துவிடவேண்டும், முக்கிய பொறுப்பு பெற்றுத்தர வேண்டும் என்று விரும்பினார். இதற்காக கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து சிபாரிசு செய்து வந்தார். முதலில் கட்சி மேலிடம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த சோமண்ணா, கட்சியின் தலைவர்கள், அவரது வாரிசுகளை சரமாரியாக திட்டி வந்தார்.

மேலும் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பதற்றம் அடைந்த கட்சி தலைவர்கள், சோமண்ணாவை சமாதானம் செய்ய முயற்சித்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சோமண்ணா, தனது மகனுக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது சோமண்ணாவின் மகன் அருணுக்கு, துமகூரு மாவட்ட துணை தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை நேற்றுமுன்தினம் துமகூரு மாவட்ட தலைவர் ரவி சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். இதை கேட்ட சோமண்ணா, தற்போது உற்சாகத்தில் மிதப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகப் போவது இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எப்படியோ காரியத்தை சாதித்துவிட்டார் என்று பா.ஜனதா கட்சி வட்டாரத்தில் தொண்டர்கள் சோமண்ணா குறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்