சிவமொக்கா தசரா விழாவின் ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்க 3 யானைகள் வருகை

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக சக்ரேபைலு முகாமில் இருந்து 3 யானைகள் சிவமொக்காவுக்கு வந்துள்ளன. அந்த யானைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-03 18:45 GMT

சிவமொக்கா;

தசரா பண்டிகை

கர்நாடகத்தில் மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு அடுத்தப்படியாக சிவமொக்காவில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 26-ந்தேதி சிவமொக்காவில் தசரா விழா தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்த தசரா விழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சிவமொக்காவில் விவசாய தசரா, இளைஞர் தசரா என தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. கலை நிகழ்ச்சிகளும், வளர்ப்பு நாய்கள் கண்காட்சியும் நடந்தது. தசரா விழா காரணமாக சிவமொக்கா நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

3 யானைகள் வருகை

இந்த நிலையில் சிவமொக்கா தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் என்னும் யானைகள் ஊர்வலம் நாளை (புதன்கிழமை) நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜம்புசவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக சக்ரேபைலு பயிற்சி முகாமில் இருந்து சாகர், நேத்ரா, பானுமதி என்ற 3 யானைகள் வந்துள்ளன.

நேற்று முன்தினம் இரவு சிவமொக்காவுக்கு வந்த அந்த யானைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த யானைகள் கோட்டை சாலையில் உள்ள வாசவி பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

நேற்றும், இன்றும் (செவ்வாய்க்கிழமை) யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. நேற்று காலை 7 மணிக்கு 3 யானைகளும் வாசவி பள்ளி வளாகத்தில் இருந்து காந்தி பஜார், நேரு சாலை, ஜெயில் சாலை, சுதந்திர பூங்கா வரை நடைபயிற்சி அளிக்கப்பட்டது.

வெள்ளி அம்பாரி

நாளை நடக்கும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் வெள்ளி அம்பாரியை சாகர் யானை சுமக்க உள்ளது. ெவள்ளி அம்பாரியை சுமந்து சாகர் யானை கம்பீர போட, பானுமதி, நேத்ரா ஆகிய 2 யானைகளும் உடன் வர உள்ளன. அதைத்தொடர்ந்து அலங்கார வாகனங்கள் வர உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்