சிக்கிம்: திருவிழா கூட்டத்தில் புகுந்த பால் வண்டி - 3 பேர் பலி; 20 பேர் காயம்
அந்த லாரி மோதியதில், ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இடித்து தள்ளப்பட்டன.
கேங்டாக்,
சிக்கிமில் ராணிபூல் நகரில் திருவிழா ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இதற்காக ஊரில் உள்ள பொதுமக்கள் பலரும் வாகனங்களிலும், நடந்தும் வந்து சேர்ந்தனர். திருவிழாவில் பல இடங்களில் கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.
இதனால், மக்கள் கடைகளில் பொருட்களை வாங்கியபடியும், உணவு வகைகளை தின்றபடியும் இருந்தனர். திருவிழாவின் ஒரு பகுதியாக தம்போலா எனப்படும் ஒரு வகை விளையாட்டு நடந்தது. இதனை பார்ப்பதற்காக பெரிய மைதானத்தில் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்தபோது, பால் ஏற்றி வந்த லாரி ஒன்று திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்தது.
அந்த லாரி மோதியதில், ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இடித்து தள்ளப்பட்டன. அவை அனைத்தும் மக்கள் மீது விழுந்து அமுக்கியதில் ஆண்கள், பெண்கள் என்று பலரும் சிக்கி கொண்டனர். சிலர் அலறியடித்தபடி ஓடினார்கள்.
தொலைவில் இருந்த வேறு சிலர் அவர்களை மீட்பதற்காக சென்றனர். இதில், 3 பேர் பலத்த காயமடைந்து, உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. சிக்கிம் பால் கூட்டமைப்பு என அந்த லாரியில் எழுதப்பட்டு இருந்தது. வாகனத்தின் பிரேக் சரியாக பிடிக்காமல் இந்த விபத்து நடந்துள்ளது என முதல்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.