'கர்நாடகத்தை ஆசிர்வதிக்க பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லை' - ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு சித்தராமையா பதிலடி
ஜனநாயகம் குறித்து பாடம் கற்க வேண்டிய தேவை ஜே.பி.நட்டாவிற்கு உள்ளதாக தெரிகிறது என சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, மோடியின் ஆசீர்வாதம் இல்லாமல் கர்நாடகம் இருக்கக் கூடாது என்றார்.
இதற்கு கர்நாடகத்தின் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், யாரையும் ஆசிர்வதிப்பதற்கு பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லை என்றும், கர்நாடகத்தை ஆசிர்வதிப்பது குறித்து ஜே.பி.நட்டா பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
ஒரு ஜனநாயக நாட்டில் வேட்பாளர்களின் தலையெழுத்தை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்றும், ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஜனநாயகம் குறித்து பாடம் கற்க வேண்டிய தேவை ஜே.பி.நட்டாவிற்கு உள்ளதாக தெரிகிறது எனவும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.