கர்நாடகத்தில் மழை-வெள்ள பாதிப்பு குறித்து கலெக்டர்களுடன் சித்தராமையா ஆலோசனை

கர்நாடகத்தில் மழை பாதிப்புகள், நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-07-26 21:51 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் மழை பாதிப்புகள், நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் மழை

கர்நாடகத்தில் ஜூன் மாதம் இறுதியில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கியது. தற்போது மழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களிலும், மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகிலும், மத்திய கர்நாடக மாவட்டங்களிலும், பெலகாவி, கதக் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மழை காரணமாக மாநிலத்தில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் பலியாவது, ஆடுகள், மாடுகள் செத்து மடிவது அரங்கேறி வருகிறது. மேலும் சாலைகள், மேம்பாலங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. மழையாலும், ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்காலும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சித்தராமையா ஆலோசனை

இந்த நிலையில், காநாடகத்தில் மேலும் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மழை பாதிப்புகள் குறித்தும், நிவாரணை பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் முன் வந்துள்ளனர். இதற்காக நேற்று பெங்களூருவில் இருந்தபடியே மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலமாக சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தில் மந்திரிகள் பரமேஸ்வர், செலுவராயசாமி, எம்.சி.சுதாகர், லட்சுமி ஹெப்பால்கர், பிரியங்க் கார்கே, ஈஸ்வர் கன்ட்ரே, தலைமை செயலாளர் வந்திதா சர்மா, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று இருந்தார்கள்.

முன் எச்சரிக்கை நடவடிக்கை

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்களுடன் சித்தராமையா பேசுகையில், வெள்ள பெருக்கு ஏற்படும் முன்பாக அபாயகரமான இடத்தில் இருக்கும் விவசாயிகளை வேறு இடத்திற்கு மாற்றுங்கள்.கடந்த ஆட்சியில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் வசிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. எங்கெல்லாம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள்.

அசம்பாவிதங்கள் நடைபெறுவது முன்பாக முன் எச்சரிக்கையாக செயல்படுங்கள். எங்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டறிந்து, அங்கு இருக்கும் மக்களை வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லுங்கள். குறிப்பாக ஆற்று படுகைகளில் அபாயத்தை மீறி தண்ணீர் சென்றால், அங்கு மக்கள் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சகித்து கொள்ள முடியாது

குறிப்பாக எங்கெல்லாம் நிலச்சரிவு ஏற்படும் என்பது பற்றிய தகவல்கள் இருக்கும்.அந்த இடங்களை அடையாளம் கண்டு மக்களை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். உடுப்பியில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால், அங்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ந் தேதியில் இருந்து கடந்த 25-ந் தேதி வரை மழைக்கு 64 பர் பலியாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.மக்கள் உயிரை காப்பாற்றுவதில் அதிகாரிகள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

அங்கன்வாடி, பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் சிதிலமடைந்து இருந்தால், அங்கு இருப்பவர்களை பாதுகாப்பானஇடத்திற்கு மாற்றுங்கள். சிதிலமடைந்த கட்டிடங்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதுபோன்று அலட்சியமாக இருப்பதை சகித்து கொள்ள முடியாது. மழை பாதிப்புகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், மீட்பு, நிவாரணை பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதை சகித்து கொள்ள சாத்தியமில்லை, என்றார்.

கூடுதலாக மழை

பின்னர் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசித்தார். மாநிலத்தில் விவசாய பணிகள் எவ்வாறு நடந்து வருகிறது என்பது குறித்தும் அவர் கேட்டு அறிந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மாநிலத்தில் பிபர்ஜாய் புயல் காரணமாக மாநிலத்தில் 56 சதவீதம் மழை குறைவாக பெய்திருந்தது. இந்த மாதம் வழக்கமாக பெய்ய வேண்டிய 228 மில்லி மீட்டர் மழையை விட கூடுதலாக 313 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. இன்னும் ஒரு வாரம் மழை பெய்யலாம் என்பதால் முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

57 வீடுகள் இடிந்தது

மாநிலத்தில் இதுவரை பெய்த மழையால் 57 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. 208 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 2682 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் 105 கால் நடைகள் பலியாகி உள்ளன. 185 ஹெக்டேர் விளை நிலங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. 407 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள், 425 கிலோ மீட்டர் மாவட்ட நெடுஞ்சாலைகள் உள்பட 2,109 கிலோ சாலைகள் மழையால் சேதம் அடைந்துள்ளது.

மேலும் 189 மேம்பாலங்கள், 889 பள்ளிக்கூட கட்டிடங்கள், 269 அங்கன்வாடிகள் சேதம் அடைந்துள்ளது. 11 ஆயிரத்து 995 மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளது. 894 டிரான்ஸ்பார்மர்கள் பாதிப்படைந்துள்ளது. 215 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார வயர்கள் பாதிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்தும், அதனை சரி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்