கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அதிரடி உத்தரவு
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். யாரும் தனித்தனியாக கடிதம் அனுப்ப வேண்டாம் என்றும், மாவட்ட பொறுப்பு மந்திரி கூட்டத்திலேயே பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். யாரும் தனித்தனியாக கடிதம் அனுப்ப வேண்டாம் என்றும், மாவட்ட பொறுப்பு மந்திரி கூட்டத்திலேயே பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி
கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் ெவற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். மேலும் மந்திரிகளும் பதவி ஏற்றனர். இந்த ஆட்சி அமைந்த பிறகு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 15 நாட்கள் நடைபெற்றது. பட்ஜெட்டில் உத்தரவாத திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு முக்கியமான துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 19-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 27-ந் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.ஆர்.பட்டீல் எம்.எல்.ஏ., முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எழுதியதாக கடிதம் ஒன்று வெளியானது. அந்த கடிதத்தில் மந்திரிகள் தங்களின் தொகுதியின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்குவது இல்லை என்றும், தங்களை மதிப்பது இல்லை என்றும், நிதி ஒதுக்க பணம் கேட்கிறார்கள் என்றும், அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் தங்களின் கருத்துகளை கேட்பதில்லை என்றும், அதனால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரசில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. இதனை மறுத்த பி.ஆர்.பட்டீல் எம்.எல்.ஏ., அந்த கடிதம் தன்னுடையது அல்ல என்றும், தனது பெயரில் போலி கடித்தை சிலர் திட்டமிட்டே வெளியிட்டுள்ளனர் என்றும் கூறினார். இதுகுறித்து அவர் கலபுரகி போலீசில் புகாரும் அளித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.
சித்தராமையா கடும் கோபம்
முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில், வருகிற நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சில எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது, தங்களின் தொகுதிகளுக்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்குமாறு கோரினர்.
அதற்கு முதல்-மந்திரி சித்தராமையா, உத்தரவாத திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், இந்த முறை கூடுதல் நிதி ஒதுக்க முடியாத நிலையில் அரசு இருப்பதாக விவரித்தார். மேலும் அவர் பேசும்போது, "எனக்கு சில எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளீர்கள். இவ்வாறு கடிதம் எழுத என்ன தேவை எழுந்தது?. உங்களின் குறைகளை எனது கவனத்திற்கு கொண்டுவர நீங்கள் நினைத்தால், என்னை நேரடியாகவே சந்தித்து அதை கூறலாமே. கடிதம் மூலம் தான் உங்களின் விஷயங்களை தெரிவிப்பீர்களா?. கடிதம் எழுதி தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். இது சரியல்ல" என்று கூறி கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பசவராஜ் ராயரெட்டி விளக்கம்
அதற்கு பதிலளித்த பசவராஜ் ராயரெட்டி, உங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடிதம் எழுதவில்லை என்றும், உங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கடிதம் எழுதியதாகவும் விளக்கம் அளித்தார்.
ஆனாலும் சித்தராமையா சமாதானம் அடையவில்லை. அவர் தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் கடிதம் எழுதிய எம்.எல்.ஏ.க்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
தனித்தனியாக கடிதம்...
மேலும் கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-
காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து மக்கள் நம்மை தேர்வு செய்துள்ளனர். அந்த நம்பிக்கை உடைத்துவிட கூடாது. காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் இது பேசப்பட்டு வருகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.
நிர்வாக ரீதியாக எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் என்னிடம் நேரடியாக கூறவேண்டும் அல்லது மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் போது கூறலாம். இதுபோல் கடிதங்கள் எழுதுவது தவறான நடவடிக்கை. எம்.எல்.ஏ.க்கள் யாரும் தனித்தனியாக எனக்கு கடிதம் அனுப்ப வேண்டாம். இனி ஒவ்வொரு மாதமும் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் பேசி தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.