எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் பட்டதாரி பெண் பிடிபட்டார்- ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேடு செய்தது அம்பலம்
எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில், மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பெங்களூரு: எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில், மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
எஸ்.ஐ. தேர்வு முறைகேடு
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 545 சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியான பின்பு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அதுகுறித்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசாருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
அதன்பேரில், விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி. போலீசார் பா.ஜனதா பெண் பிரமுகர், காங்கிரஸ் பிரமுகர்கள், போலீஸ்காரர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
போலீஸ் டி.ஜி.பி. கைது
மேலும் இந்த முறைகேட்டிற்கு மத்தியில் பல கோடி ரூபாய் கைமாறியதாக எழுந்த புகாரையடுத்து போலீஸ் தேர்வு மைய கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால் உள்பட பல போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர். முறைகேடு வழக்கில் பணியில் இருந்த போது போலீஸ் டி.ஜி.பி. கைது செய்யப்பட்டது கர்நாடக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அவர் உள்பட இந்த வழக்கில் கைதானவர்களிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.ஐ. தேர்வில் மகளிர் பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடியை சேர்ந்த ரஜனா (வயது 25) என்ற பட்டதாரி பெண் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சி.ஐ.டி. போலீசார் அவரை தேடிவந்தனர். இதற்கிடையே ரஜனாவை மராட்டிய எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் கிரோலி சோதனை சாவடி பகுதியில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர்.
17-வது குற்றவாளி
தேர்வு முறைகேட்டில் 17-வது முக்கிய குற்றவாளியாக இவர் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில்,ரஜனா, ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு, மாநில அளவில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்ததும் தெரியவந்தது. கைதான ரஜனாவை சி.ஐ.டி. போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து வருகிறார்கள். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர் யாரிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டார், அவருக்கு யார்-யார் உதவினார்கள் என்ற தகவல்கள் விசாரணையின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டத்திலும் ஈடுபட்டார்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் மூத்த போலீஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தேர்வில் முதலிடம் பிடித்த ரஜனா என்ற பெண் தேர்வர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு விவகாரம் வெளியானபோது இவர் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக சக தேர்வர்களுடன் மறுதேர்வு வைக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தவுடன் தலைமறைவான அவர் தற்போது கைதாகி உள்ளார்.இவர் ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் முறைகேட்டில் ஈடுபட யார்-யார் உதவி செய்தார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கர்நாடகத்தில் நடந்த எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் தோண்ட தோண்ட பூதம் வந்த கதையாக பகீர் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.