ஷாரிக்கிடம் பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவில் திடுக்கிடும் தகவல்கள்
ஷாரிக்கிடம் பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
மங்களூரு குண்டுவெடிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் பயங்கரவாதி ஷாரிக் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரித்தபோது, பயங்கரவாதி ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. என்.ஐ.ஏ. விசாரணையில், ஷாரிக் தென்இந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டு ஆள்கள் சேர்த்து வந்ததும், தமிழ்நாடு, கேரளாவில் தங்கி இருந்து பலரை சந்தித்து பேசியதும் தெரியவந்தது. மேலும் கேரளாவில் தங்கி வெடி பொருட்களை பார்சல் மூலம் வாங்கியதும் தெரிந்தது. மேலும் அவர் டார்க்நெட் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிரிப்டோகரன்சி மூலம் பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
மங்களுருவில் இருந்து பெங்களுரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட ஷாரிக், அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர் முழுமையாக குணமடைந்ததும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஷாரிக் கொடுத்த தகவலின்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பென்டிரைவ் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
80 ஜி.பி. சேமிப்பு திறன் கொண்ட அந்த பென்டிரைவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பயங்கரவாத திட்டங்கள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இருந்தது. அதாவது, குண்டுவெடிப்பு பயிற்சி, பயங்கரவாத திட்டங்கள் தொடர்பான தகவல்கள் 'பி.டி.எப்' வடிவில் இருந்தது. மேலும் வீடியோக்களும் இருந்தன. மேலும் அதில் பயங்கரவாத திட்டங்கள் குறித்து ஷாரிக் உள்பட சிலர் பேசுவது தொடர்பான ஆடியோக்களும் அதில் இருந்தன. சட்டம்-ஒழுங்கை சீர் குலைப்பது குறித்தும் பேசப்பட்டு இருந்தது. மேலும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பான வீடியோகளும் இருந்தன.
இதுமட்டுமல்லாது "ஜிகாத் மூலம் இஸ்லாமை பாதுகாத்து, பிற மதங்களுக்கு நாம் யார் என்று காட்ட வேண்டும்" என்று தீர்த்தஹள்ளியில் ஹிசாப்-உல்-முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மோல்வி பேசிய ஆடியோ ஒன்றும் இருந்தது.
வீரப்பன் பாணியில்...
இதற்கிடையே பயங்கரவாதி ஷாரிக்கிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது சிவமொக்கா வனப்பகுதி தற்போதும் பயங்கரவாதிகள் செயல்பாட்டில் தான் உள்ளதாகவும், மேலும் சந்தன கடத்தல் வீரப்பன் பாணியில், வனப்பகுதியில் குழி தோண்டி பீப்பாய்களில் உணவுகளை சேகரித்து உண்டு வந்ததாகவும் ஷாரிக் தெரிவித்தார்.
இதனால் உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் என்றும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருக்காது எனவும் அவர் கூறினார். மேலும் ஷாரிக், தனது கூட்டாளிகளுடன் வனப்பகுதியில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஷாரிக்கின் வாக்குமூலத்தை தீவிரமாக எடுத்து கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட பென்டிரைவை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.