ராஜஸ்தானில் அதிர்ச்சி; நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை
ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
கோட்டா,
ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளுக்கு தயாராவதற்காக வருகை தருகின்றனர். எனினும், அவர்களில் பலர் படித்து வரும்போதே தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து வருகிறது.
படிப்பிற்கான அழுத்தம் மற்றும் மாணவர்களிடையே தோல்வி பற்றிய பயம் ஆகியவையே இதற்கு காரணம் என பலரும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மற்றொரு மாணவர் கோட்டா நகரில் நேற்று தற்கொலை செய்து உள்ளார். அவர், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்து, நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் இது 26-வது சம்பவம் ஆகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் சேருகின்றனர். எனினும், கடந்த ஆண்டு கோட்டாவில் 15 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்தனர். நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது.
ராஜஸ்தான் மந்திரி பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கடந்த ஆகஸ்டில் செய்தியாளர்களிடம் கூறும்போது, கோட்டா நகர் பயிற்சி மையங்களில் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இதுபோன்ற பயிற்சி மையங்கள் நடைபெறுகின்றன என கூறினார். மாபியா கும்பல் போன்று அவை செயல்படுகின்றன என்றும் இதற்கு எதிராக காங்கிரஸ் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி பேசினார். இதனை தொடர்ந்து, நீட் தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது.