காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டி? - சோனியா காந்தி சம்மதம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டியிட சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-09-19 15:19 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார்? என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிற காங்கிர மூத்த தலைவர்களும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சசிதரூர் இன்று சந்தித்தார். டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூருக்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உங்கள் முடிவு. தேர்தல் நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெறும்' என சசிதரூரிடம் சோனியா காந்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிடும் பட்சத்தில் அது ராகுல்காந்திக்கு பின்னடைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்