காங்கிரஸ் தேசிய இளைஞரணி தலைவர் சீனிவாஸ், தடகள போட்டியில் பங்கேற்கலாம்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. கிண்டல்

காங்கிரஸ் தேசிய இளைஞரணி தலைவர் சீனிவாஸ், தடகள போட்டியில் பங்கேற்கலாம் என சி.டி.ரவி எம்.எல்.ஏ. கிண்டல் செய்துள்ளார்.

Update: 2022-06-15 15:31 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் அரசு சார்பாக வங்கியில் சுயதொழிலுக்கு வழங்கப்படும் கடன் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் சீனிவாஸ், போலீசாரை கண்டதும் கைது செய்து விடுவார்கள் என தலைதெறிக்க ஓடியதை பார்த்தேன். அவர் ஓடுவதை பார்த்தால் தடகள போட்டியில் சீனிவாஸ் கலந்து கொண்டு ஓடினால் நிச்சயம் வெற்றி பெறுவார்.

நாங்களும்(பா.ஜனதா) பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் நடத்தியுள்ளோம். போராட்ட களத்தில் நெஞ்சை நிமிர்த்து கொண்டுதான் போராட்டம் நடத்தினோம். சிறைச்சாலைக்கு சென்று பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம்.

ஆனால் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் புறமுதுகு காட்டி ஓடுவது அரசியல்வாதிக்கு பெருமை கிடையாது. இப்படிபட்டவர்கள் எப்படி அரசியல் செய்து மக்களுக்கு நல்லது செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்