சூடானில் இருந்து மேலும் 246 இந்தியர்கள் மீட்பு

சூடானில் சிக்கியிருந்த மேலும் 246 இந்தியர்கள் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-27 11:03 GMT

புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நடந்து வரும் உள்நாட்டு போரால் ஒட்டுமொத்த தேசமும் நிலைகுலைந்து இருக்கிறது.

10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் அப்பாவி மக்கள் உள்பட 400-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

எனவே அங்கு வசித்து வரும் வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன. இதற்காக சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன.

இந்த நடவடிக்கைகளுக்கு வசதியாக சூடானில் 3 நாட்கள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி வெளிநாடுகள் தங்கள் குடிமக்களை மீட்கும் பணிகளை முடுக்கி விட்டு உள்ளன. சூடானில் சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து உள்ளது. 'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் இந்த பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக ஐ.என்.எஸ். சுமேதா போர்க்கப்பல் மற்றும் விமானப்படையின் 2 சி-130ஜே ரக விமானங்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளன. இதில் முதல்கட்டமாக 534 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். முதற்கட்டமாக மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் நேற்று டெல்லி வந்தனர்.

இந்தநிலையில், சூடானில் சிக்கியிருந்த மேலும் 246 இந்தியர்கள் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டுள்ளதாகவும் விமானம் மூலம் மீட்கப்பட்ட 246 பேரும் மும்பை வந்தடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சூடானில் சிக்கி இருந்த 246 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் மும்பையில் தரையிறங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்