வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளிச்சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-30 03:43 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா நகரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அங்கிதா குமாரி. இவர் பிளஸ் 2 படித்து வந்தார்.

இதனிடையே, அங்கிதா குமாரி வசித்து வரும் அதேபகுதியில் முகமது ஷாருக் ஹசன் என்ற இளைஞர் வசித்து வந்தார். ஷாருக் ஹசன் தன்னை காதலிக்குமாறு அங்கிதாவை பல நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். அங்கிதாவின் செல்போன் எண்ணை பெற்ற தன்னிடம் பேசுமாறும், தன்னை காதலிக்குமாறும் ஷாருக் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அங்கிதா சிறுவயதில் இருந்தபோதே அவரது தாயார் உயிரிழந்துவிட்டார். ஷாருக் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக கடந்த 22-ம் தேதி இரவு அங்கிதா தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஷாருக்கின் குடும்பத்திடம் நாளை பேசுவோம் என அங்கிதாவின் தந்தை கூறியுள்ளார்.

அன்று இரவு சாப்பிட்டுவிட்டு அங்கிதா தனது வீட்டில் உள்ள தனது அறையில் உறங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவு அங்கிதாவின் வீட்டிற்குள் நுழைந்த ஷாருக் ஜன்னல் வழியாக அங்கிதா உறங்கிக்கொண்டிருந்த படுக்கை மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். தீ அங்கிதா மீதும் பிடித்தது.

உறங்கிக்கொண்டிருந்த அங்கிதா தன் உடல் தீயில் எரிவதை உணர்ந்து விழித்து, அலறியுள்ளார். தனது மகளின் அலறல் சத்தம் கேட்ட அங்கிதாவின் தந்தை அறைக்கு ஓடி வந்து பார்த்துள்ளார். அங்கு அங்கிதா தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடலில் போர்வையை கொண்டு அணைத்துள்ளார்.

படுகாயமடைந்த அங்கிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 45 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடுமையான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அங்கிதா நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது மரண வாக்குமூலத்தில், காதலிக்க மறுத்ததால் ஷாருக் ஹசன் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக அங்கிதா தெரிவித்தார்.

காதலிக்க மறுத்ததால் சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற ஷாருக் ஹசனை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியான நயீம் கான் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த அங்கிதாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

அங்கிதாவை பெட்ரோல் ஊற்றி தீவைத்த ஷாருக் ஹசன் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் அழைத்து செல்லும்போது அவர் சிரித்துக்கொண்டே நடந்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் இந்து - இஸ்லாமிய மதரீதியிலான மோதலை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதால் தும்கா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்