ரூ.50 லட்சம் செலவு செய்தும் சிக்கவில்லை: பெலகாவியில் சிறுத்தையை தேடும் பணி நிறுத்தம்?
ரூ.50 லட்சம் செலவு செய்தும் சிக்காததால் பெலகாவியில் சிறுத்தையை தேடும் பணி நிறுத்தப்படுகிறதா?
பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் டவுன் பகுதியில் உள்ள கோல்ப் மைதானத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி ஒரு சிறுத்தை சுற்றியது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக டவுன் பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதி உண்டானது. சிறுத்தை நடமாட்டத்தால் கோல்ப் மைதானத்தை சுற்றியுள்ள பள்ளிகள் 2 வாரத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. பெரும் பீதியை ஏற்படுத்திய அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த ஒரு மாதமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதாவது பகல், இரவு பார்க்காமல் சிறுத்தையை தேடும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 2 யானைகள், 300-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டார்கள்.
சிறுத்தையை தேடும் பணிக்காக பொக்லைன் எந்திரமும் பயன்படுத்தப்பட்டது. சிறுத்தையை தேடும் பணிக்காக தினமும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை செலவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக சிறுத்தையை தேடுவதற்காக ரூ.50 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஒரு மாதம் ஆகியும் வனத்துறையினரால் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, சிறுத்தையை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுத்தை பிடிக்க கோல்ப் மைதானத்தை சுற்றி 8 இரும்பு கூண்டுகள், 16 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.