எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் வரலாற்று சிறப்புமிக்க முடிவு-மந்திரி சுதாகர் கருத்து
எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கியது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
வரலாற்று சிறப்புமிக்க முடிவு
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- சமூக நிதி அரசியலை பொறுத்தவரை, சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டிற்கான கட்டமைப்பை வழங்கிய பெருமை கர்நாடகத்திற்கு உண்டு. 1915-ம் ஆண்டு அப்போதைய மைசூரு மன்னர் கல்வி மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் பற்றிய மில்லர்ஸ் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தினார்.
1977-ம் ஆண்டு அப்போதைய முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ், எல்.ஜி.ஹவனூர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் 15 (4), மற்றும் 16 (4) என் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அறிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின் பல அமர்வுகள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகளின் அரசியலமைப்பு செல்லுபடியை நிலைநிறுத்த கர்நாடகத்தை மேற்கொள் காட்டியுள்ளன. தற்போது கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கி வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்து உள்ளார்.
தொலைநோக்கு பார்வை
நீதிபதி நாகமோகன் தாஸ் கமிஷன் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு சமூகத்தில் சுரண்டப்படும் மக்களின் நலனுக்காக நாங்கள் எப்போதும் உண்மையாக இருப்போம் என்று நிருபித்து உள்ளோம். நாம் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை தாண்டி உள்ளோம் என்ற அச்சம் இருக்கலாம்.
ஆனால் நமது அண்டை மாநிலமான தமிழகத்தில் இடஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் தான் அனைத்து சாதி, சமூகங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் இடஒதுக்கீடு என்ற பலனை பெற முடிகிறது.
இவ்வாறு சுதாகர் கூறியுள்ளார்.