ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு..!
ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 23-ந் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவுடன், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதன்மூலம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ராகுல்காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக புனே நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது சாவர்க்கரின் பேரன் வழக்கு தொடர்ந்துள்ளார். லண்டனில் பேசியபோது அவதூறு கருத்துகளை ராகுல் தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூரத், பாட்னா நீதிமன்றத்தை தொடர்ந்து புனே நீதிமன்றத்திலும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.