மெட்ரோ ரெயில் கதவில் சிக்கிய சேலை: தண்டவாளத்தில் விழுந்த பெண் பலி
தண்டவாளத்தில் விழுந்த பெண் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டார்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியை சேர்ந்த பெண் ரீனா (வயது 35). கணவரை இழந்த ரீனாவுக்கு 12 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். ரீனா பைரஹி மர்க் பகுதியில் காய்கறி விற்பனை தொழில் செய்து வந்தார்.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை ரீனா தனது மகனை அழைத்துக்கொண்டு இண்டர்லாக் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு மெட்ரோ ரெயிலில் ரீனா ஏறியுள்ளார். ஆனால் தனது மகன் ரெயிலில் ஏறாததை கண்ட ரீனா ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார்.
அப்போது, மெட்ரோ ரெயிலின் கதவு மூடியுள்ளது. இதில், ரீனாவின் சேலை கதவில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரீனா சேலையை கதவில் இருந்து எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள் மெட்ரோ ரெயில் புறப்பட்டதால் ரீனா சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டார். அப்போது, அவர் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். இதனால், அவர் மீது மெட்ரோ ரெயில் ஏறியது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரீனா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை சிகிச்சைக்கு அனுமதிக்க 3 மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இறுதியாக டெல்லி சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் ரீனா அனுமதிக்கப்பட்டார். தலை மற்றும் உடல் பகுதியில் கடுமையான காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ரீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரீனா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கியதில் தண்டவாளத்தில் விழுந்த பெண் ரெயில் ஏறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.