தீண்டாமை இழைக்கப்பட்ட சிறுவன் குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம்- கலெக்டர் அதிரடி நடவடிக்கை

தீண்டாமை இழைக்கப்பட்ட தலித் சிறுவனை அவனது குடும்பத்துடன் கலெக்டர் வெங்கடராஜா கோவிலுக்குள் அழைத்து சென்றார்.

Update: 2022-09-22 18:45 GMT

கோலார் தங்கவயல்:

தலித் சிறுவனுக்கு அபராதம்

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி அருகே கொல்லேரஹள்ளி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 15 வயதான தலித் சிறுவன், தேரில் இருந்த சாமியை தொட்டு வணங்கி உள்ளான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர், அந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் அபராத தொகையை செலுத்தாவிட்டால் கிராமத்தை விட்டே வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இந்த தீண்டாமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் அழைத்து சென்றார்

இந்த நிலையில் இந்த விவகாரம் கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜாவின் கவனத்துக்கு வந்தது. அவர் நேற்று கொல்லேரஹள்ளி கிராமத்துக்கு நேரில் சென்றார். அவருடன் சமூக நலத்துறை அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோரும் சென்றனர். இந்த நிலையில், கலெக்டர் வெங்கடராஜா, தலித் சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினரை அந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது கோவிலின் கதவு பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் அந்த பூட்டு உடைத்து கதவு திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் தலித் சிறுவன் உள்பட குடும்பத்தினரை அழைத்து சென்றார். இதையடுத்து அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கலெக்டர் வெங்கடராஜா கூறுகையில், 21-ம் நூற்றாண்டில் இதுபோன்ற தீண்டாமையை அனுமதிக்கக்கூடாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்