உத்தரபிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து சமாஜ்வாடி தலைவரின் மனைவி, தாய் பலி

உத்தரபிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து சமாஜ்வாடி தலைவரின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-01-25 21:21 GMT

லக்னோ,

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் 'ஆலயா' குடியிருப்பு என்ற பெயரில் 5 மாடி கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தன.சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹைதரும் தனது தாய் பேகம் ஹைதர் (வயது 87), மனைவி உஸ்மா ஹைதர் (30) ஆகியோருடன் இந்த குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த 5 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் மாலையில் திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின்போது கட்டிடத்தில் இருந்த பேகம் ஹைதர், உஸ்மா ஹைதர் உள்பட பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய பேரிடர் மீட்புக்குழு

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். இவர்களுடன் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் இணைந்து கொண்டனர். இந்த மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் பயனாக பேகம் ஹைதர், உஸ்மா ஹைதர் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை வரை மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் ஹைதர், உஸ்மா ஹைதர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் சிக்கியுள்ளனர்

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் 2 பேர் சிக்கியிருக்கலாம் என தெரியவந்தது. எனவே அவர்களையும் மீட்பதற்காக நேற்று காலையிலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நீடித்தன.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக முன்னாள் மாநில மந்திரியும், சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வுமான ஷாகித் மன்சூரின் மகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மீரட்டில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக லக்னோ கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இந்த குடியிருப்பை இவர்தான் விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

3 நபர் கமிட்டி அமைப்பு

இதற்கிடையே 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பான 3 நபர் கமிட்டியை அமைத்துள்ள அவர், ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தி உள்ளார்.

5 மாடி கட்டிடம் இடிந்து சமாஜ்வாடி தலைவரின் மனைவி, தாய் உயிரிழந்த சம்பவம் லக்னோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்