"காவி, இந்தியை திணிக்க முயற்சி" - கேரளா கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

காவி, இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக கேரளா கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-10-01 18:27 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் இன்று முதல் இம்மாதம் 3-ந் தேதிவரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, 'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வு மூலம் கல்வி உரிமைகள் பறிக்கப்படுகிறது. புதிய தேசிய கல்விக்கொள்கை மூலமாக காவி, இந்தியை திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது. நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை, மத்திய அரசு சட்டத்தின் மூலம் நிறைவேற்ற முயற்சி செய்கிறது. இதற்கு எதிரான குரல் தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "நமது உணர்வுகளை பேசுவதுடன் நிறுத்தாமல் செயல்பாட்டில் காட்ட வேண்டிய நேரம் இது. மாநில சுயாட்சியை உருவாக்குவதற்கு வழிகாட்டியவர் கலைஞர். பேரறிஞர் அண்ணா தனது இறுதி கடிதத்தில் வலியுறுத்தியது மாநில சுயாட்சித்தான். அரசியலமைப்பு உருவாக்கியவர்கள் ஒற்றை ஆட்சி கூடாது; கூட்டாட்சிதான் வேண்டும். மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு குறைக்கிறது. நிதி உரிமைகளை பறித்து மாநிலங்களை விரக்தி உணர்வுக்கு மத்திய அரசு தள்ளுகிறது. அரசியலமைப்பு சட்டம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

ஜி.எஸ்.டி மூலம் மாநிலத்தின் நிதி உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. நிதி உரிமை பறிக்கப்படுவதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மத்திய அரசு தடுக்கிறது' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்