பொதுப் பிரச்சினைகளை எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது, அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் - ராகுல்காந்தி
பிரதமரே, விவாதங்களையும், கேள்விகளை தவிர்ப்பதும் தான் பாராளுமன்ற விவாதமுறைக்கு எதிரானது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நேற்று நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்கியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் விவாதம் நடத்த வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்தித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,
'டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 80. எரிவாயு 1000க்கு மேல். ஜூன் மாதத்தில் மட்டும் 1.3 கோடி பேருக்கு வேலை போய்விட்டது. பொது மக்களின் பிரச்சினைக்காக நாங்கள் குரல் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். பிரதமரே, விவாதங்களையும், கேள்விகளை தவிர்ப்பதும் தான் பாராளுமன்ற விவாதமுறைக்கு எதிரானது என பதிவிட்டுள்ளார்.
எத்தனையோ வார்த்தைகளை "அன்பார்லிமென்ட்" என்று அறிவித்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க பிரதமர் முயற்சித்தாலும், இந்த விவகாரங்களுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.