பஞ்சமசாலி சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் சட்டசபையில் அரசு முடிவை அறிவிக்க கோரி ஆளும் பா.ஜனதா உறுப்பினர் தர்ணா

பஞ்சமசாலி சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அரசு முடிவை அறிவிக்க கோரி சட்டசபையில் ஆளும் பா.ஜனதா உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-09-20 21:29 GMT

பெங்களூரு: பஞ்சமசாலி சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அரசு முடிவை அறிவிக்க கோரி சட்டசபையில் ஆளும் பா.ஜனதா உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தெளிவான பதில்

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத்னால் பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு தெளிவான பதிலை கூற வேண்டும் என்று கேட்டார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் பஞ்சமசாலி உள்பட பல்வேறு சமூகங்கள் இட ஒதுக்கீடு குறித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

பஞ்சமசாலி சமூகம், தங்களை 2ஏ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்கிறது. பழங்குடியினர் தங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் அறிவியல் பூர்வமாக தான் முடிவு எடுக்க முடியும். மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

50 சதவீத பணிகள்

இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த ஆணையம் 50 சதவீத பணிகளை முடித்துள்ளது. அந்த ஆணையம் அறிக்கை வழங்கியதும் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

முதல்-மந்திரியின் இந்த பதிலால் திருப்தி அடையாத பசனகவுடா பட்டீல் யத்னால், சபாநாயகர் இருக்கையின் முன் பகுதிக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். சபாநாயகர் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் இருக்கைக்கு திரும்பினார்.


Tags:    

மேலும் செய்திகள்