கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு?

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை, கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-21 21:27 GMT

பெங்களூரு:

பசவராஜ் பொம்மை ஆலோசனை

கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பால் விலையை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், விலையை உயர்த்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அனுமதி வழங்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பால் விலையை உயர்த்துவது தொடர்பாக பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவர் பாலசந்திர ஜார்கிகோளி, பிற கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். மேலும் பால் விலையை உயர்த்துவது குறித்து பால் கூட்டமைப்பின் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

பால் விலையை உயர்த்த...

அப்போது மாநிலத்தில் பால் விலையை ரூ.3 உயர்த்த வேண்டும் என்று பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தினார்கள். பசு மாடுகளுக்கான தீவனம், மாடுகளை பராமரிக்க ஆகும் செலவு, தொழிலாளர்கள் செலவு உள்ளிட்டவை அதிகமாக இருப்பதால், பால் விலையை கண்டிப்பாக ரூ.3 வரை உயர்த்த வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தினார்கள்.

ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், பாலின் விலையையும் உயர்த்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி இருப்பதாக தெரிகிறது. மேலும் பால் விலையை உயர்த்துவதால் ஏற்படும் சாதகங்கள், பாதகங்கள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்து முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பால் கூட்டமைப்பின் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

ரூ.2 உயர்த்த முடிவு?

அதே நேரத்தில் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்துவதற்கு பதிலாக ரூ.2 மட்டும் உயர்த்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. பால் விலையை உயர்த்தினால் மக்களிடம் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும், பால் விலையை உயர்த்தாவிட்டால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும், இதுபோன்ற காரணங்களால் பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் அரசு மிகுந்த கவனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், பால் விலையை உயர்த்தினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம் என்பதால், விலை உயர்வை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடர்ந்து தள்ளி வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மழைக்காலத்திற்கு முன்பாக பால் விலையை உயர்த்தும்படி அரசுக்கு, அதிகாரிகளும் சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்