ரூ.60 கோடி மோசடி பா.ஜனதா எம்.எல்.சி. மீது விசாரணைக்கு அனுமதி- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

வீட்டுமனை கொடுப்பதாக கூறி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் பா.ஜனதா எம்.எல்.சி. மீது விசாரணைக்கு அனுமதி வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-07-30 18:45 GMT

பெங்களூரு:-

வீட்டுமனை தருவதாக மோசடி

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவை சேர்ந்தவர் சி.பி.யோகேஷ்வர். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர், கர்நாடக மேல்-சபை உறுப்பினராக(எம்.எல்.சி) இருந்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு மெகாசிட்டி என்ற பெயரில் பொதுமக்களுக்கு வீட்டுமனை கொடுப்பதாக கூறி சி.பி.யோகேஷ்வர் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. வீட்டுமனைக்காக ஏராளமானவர்கள் சி.பி.யோகேஷ்வரின் நிறுவனத்திடம் பணம் கொடுத்திருந்தனர்.

ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு வீட்டுமனை கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சி.பி.யோகேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மெகாசிட்டி திட்டத்தின் கீழ் வீட்டுமனை கொடுப்பதாக கூறி ரூ.60 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சி.பி.யோகேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவாகி இருந்தது.

விசாரணைக்கு ஐகோர்ட்டு அனுமதி

இதற்கிடையில், தன் மீதும், தன்னுடைய குடும்பத்தினர் மீதும் பதிவான வழக்குகளை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் கர்நாடக ஐகோர்ட்டில் சி.பி.யோகேஷ்வர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதுபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது சி.பி.யோகேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை ரத்து செய்யவும், இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கும் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சி.பி.யோகேஷ்வருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதுடன், முறைகேடு தொடர்பான விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்