தொழில் அதிபர் வீட்டில் பதுக்கிய ரூ.3 கோடி சிக்கியது; மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் அதிரடி
தார்வாரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் தொழில் அதிபரின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடியை கைப்பற்றினர்.
உப்பள்ளி:
தொழில் அதிபர்
தார்வார் (மாவட்டம்) உப்பள்ளி டவுன் அசோக் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் போனகேரி. இவர் தொழில் அதிபர் ஆவார். கடந்த 20 வருடங்களாக ஏராளமான தொழில்களை இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான புகார்கள் தார்வார் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கும் சென்றன. மேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் வருவதையொட்டி இவரது வீட்டில் கோடி, கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன்பேரில் இவரது வீட்டில் நேற்று மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயணா பரமணி தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ரூ.3 கோடி ரொக்கம்
அவர்கள் வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். அனைத்து அறைகள், பீரோக்கள் என அனைத்து இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தொழில் அதிபர் ரமேஷ், தனது வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவற்றை ரூபாய் நோட்டு எண்ணும் எதிரத்தின் மூலம் எண்ணினர்.
அப்போது அதில் மொத்தம் ரூ.3 கோடி ரொக்கம் இருந்தது. அவற்றை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள், கணக்கு-வழக்குகள் எதுவும் தொழில் அதிபர் ரமேசிடம் இல்லை என்றும், அதனால் அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரபரப்பு
இந்த நிலையில் தொழில் அதிபர் ரமேசின் வீட்டில் ரூ.3 கோடி சிக்கிய விவகாரம் தொடர்பாக சில அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தார்வாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.