2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதால் மத்திய அரசு சாதிக்க போவது என்ன? - தேசியவாத காங்கிரஸ் கேள்வி
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதால் மத்திய அரசு சாதிக்க போவது என்ன என்று தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. பொதுமக்கள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் கையில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிரஸ்டோ கூறுகையில், "2,000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து இந்த அரசு என்ன சாதித்துவிட்டது. அதேபோல இப்போது அந்த நோட்டை திரும்ப பெறுவதால் எதை சாதித்துவிடப்போகிறது. பணமதிப்பிழப்பு மிகப்பெரிய வெற்றி என கூறப்பட்டது. அப்படி என்றால், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற காரணம் என்ன?. 2016-ம் நவம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது பலர் உயிரிழந்தனர். அதுபோன்ற முடிவால் பொதுமக்கள் ஏன் துன்புறுத்தப்பட்டனர் என்பதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்" என்றார்.