பெங்களூருவில் ரூ.2½ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு போதைப்பொருட்கள் விற்றதாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்
பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார், நகரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்திருந்தனர். அந்த கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த போதைப்பொருட்களை, போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
13 பேர் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். மேலும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாகவும் கண்காணித்து வந்தனர்.
அதன்படி, பெங்களூரு ஹெண்ணூர், பானசவாடி, கே.ஆர்.புரம், பொம்மனஹள்ளி, கோரமங்களா, தலகட்டபுரா, எச்.எஸ்.ஆர். லே-அவுட், கொடிகேஹள்ளி, புட்டேனஹள்ளி ஆகிய 9 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக ஒட்டுமொத்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சூடான், உகாண்டா, நைஜீரியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆன்லைன் மூலமாக பணம்
முக்கியமாக தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் போதைப்பொருட்களை வைத்துவிட்டு, அந்த போதைப்பொருட்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைப்பார்கள்.
ஆன்லைன் மூலமாக போதைப்பொருட்களுக்கு உரிய பணத்தை பெற்றுக் கொண்டு பெரிய அளவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர்களிடம் இருந்து மட்டும் 1¼ கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.2.48 கோடி மதிப்பு
ஒட்டுமொத்தமாக கைதான 13 நபர்களிடம் இருந்து 1 கிலோ 556 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 41 போதை மாத்திரைகள், 25 கிலோ கஞ்சா, 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 48 லட்சம் ஆகும். கைதான 13 பேர் மீதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உடன் இருந்தார்.