கொரோனா பாதிப்பு உயர்வு; முன்னெச்சரிக்கை, மரபணு பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மரபணு பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-03-22 14:45 GMT



புதுடெல்லி,


இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி பாதிப்பு ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பதிவாகி உள்ளது.

இதனால், பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணி அளவில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

மூத்த அதிகாரிகளுடனான இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆய்வக கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியதுடன், மரபணு பரிசோதனை மற்றும் கடுமையான சுவாச பாதிப்புகளுக்கு ஆளான அனைவருக்கும் பரிசோதனை செய்யும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று மருத்துவமனைகளில் மாதிரி சிகிச்சை முறைகளை நடத்திடும்படியும், கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

ஒவ்வொருவரும் சுவாச சுகாதார பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் கொரோனாவுக்கான முறையான அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்