பீகாரில் நிதிஷ்குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி! சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேஜஸ்வி யாதவ் பேச்சு

நிதிஷ் குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-12 16:27 GMT

புதுடெல்லி,

நிதிஷ் குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அம்மாநில துணை முதல் மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது, "நான் சந்தித்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு வாழ்த்து தெரிவித்தனர். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசை அனைத்து தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

தற்போதைய அரசு மக்களின் அரசு, புதிய அரசு வலிமையுடன் இயங்கும். பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற நிதிஷ் குமாரின் முடிவு சரியான நேரத்தில் பாஜகவின் முகத்தில் அறையப்பட்ட சரியான அடி.

பீகாரில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாடு முழுவதும் எதிரொலிக்கும். பிறரை அச்சுறுத்துவதையே நோக்கமாகக் கொண்ட பாஜகவால் பீகார் மக்களை அச்சுறுத்த முடியாது.

இந்து, முஸ்லிம், கோயில், மசூதி என்றே பாஜகவின் அரசியல் இருக்கிறது. தற்போதைய புதிய அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் விரைந்து செயல்படும்.

தற்போது அமைந்துள்ள அரசு, முந்தைய பாஜக அரசைப் போல் அல்லாமல் மக்கள் பிரச்சினைகளை களையக்கூடிய அரசாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்.வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு வேலை வாய்ப்பு அதிகரிப்பில் கவனம் செலுத்தப்படும்.

இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முதல் மாநிலமாக பீகார் உருவெடுக்கும்.

பிராந்திய கட்சிகள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள் நிறைந்தவர்கள். பாஜக அத்தகைய கட்சிகளை முடித்துக்கட்ட விரும்புகிறது.

நிதிஷ்குமாரை முடிக்க நினைத்த நீங்கள், ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியில் பிளவை உருவாக்கினீர்கள். பிராந்தியக் கட்சிகள் ஒழிந்தால், எதிர்க்கட்சிகள் ஒழிந்துவிடும், அதன்பின் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். ஜனநாயகம் ஒழிந்தால் நாடு சர்வாதிகார போக்கில் இயங்கும்

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றாகவே இருக்கும். சோனியா காந்தி, சீதாராமன் யெச்சூரி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக எனது தந்தை லாலு யாதவ் ஆகியோருக்கு நன்றி, ஏனென்றால் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு அவர்கள் யாரும் ஒருபோதும் தலைவணங்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்