அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதம் - காங்கிரஸ் தலைமை அதிருப்தி
எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் தனது திட்டமிடல் எதுவும் இல்லை என அசோக் கெலார் மறுத்துள்ளார்.
ஜெய்பூர்,
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், அம்மாநில புதிய முதல் மந்திரி குறித்த சலசலப்பு கிளம்பியுள்ளது. அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ராஜஸ்தானில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று அசோக் கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே தேர்தலுக்கு முன்பாகவே ராஜஸ்தான் முதல்-மந்திரியாக சச்சின் பைலட் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியது. இதனால் அதிருப்தியடைந்த அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 82 பேர் ராஜினாமா கடிதத்தை அளிக்க முன்வந்தனர்.
அவர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மக்கான் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கெலாட் ஆதரவாளரையே முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். இந்த விவகாரம் காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் தனது திட்டமிடல் எதுவும் இல்லை என அசோக் கெலார் மறுத்துள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தில் அசோக் கெலாட் மீது காங்கிரஸ் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.