ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் அண்ணன் மகன் பிணமாக மீட்பு

5 நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்ட நிலையில் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. அண்ணன் மகன் கால்வாயில் காருடன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-03 21:17 GMT

சிக்கமகளூரு:-

ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரேணுகாச்சார்யா. இவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளராகவும் உள்ளார். இவரது அண்ணன் ரமேசின் மகன் சந்திரசேகர்(வயது 27). என்ஜினீயரிங் படித்த இவர், சாலை மற்றும் கட்டிட காண்டிராக்டர் வேலை செய்து வந்ததுடன் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வுக்கு அரசியலில் சம்பந்தமான வேலைகளில் பக்க பலமாகவும் இருந்து வந்துள்ளார்.

காணாமல் போனார்

இந்த சூழ்நிலையில் கடந்த 30-ந்தேதி சந்திரசேகர் தனது காரில் வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வும் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அண்ணன் மகன் சந்திரசேகரை தேடும் பணியில் ஈடுபட்டார்.

ஆனால் எங்கு தேடியும் சந்திரசேகர் கிடைக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஒன்னாளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சந்திரசேகரை தேடிவந்தனர். மேலும் அவரது கார் சென்று வந்த சாலை விவரங்களை சேகரித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து பார்வையிட்டனர்.

அதில் அவர் காரில் சிவமொக்காவுக்கு சென்று விட்டு அங்கிருந்து சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கௌரிகத்தே சென்று வினய் குருஜி சுவாமியின் ஆசிரமத்திற்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் அன்றிரவு 11 மணிக்கு ஒன்னாளிக்கு காரில் வந்துள்ளார். அதன்பிறகு அவரது கார் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. மேலும் ஒன்னாளி பகுதியில் வைத்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.

இதையடுத்து சந்திரசேகரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

5-வது நாளாக...

ஆனால் காணாமல் போன நாள் முதல் நேற்றுமுன்தினம் வரை 4 நாட்கள் ஆகியும் சந்திரசேகர் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது. குறிப்பாக மகன் உறவுமுறை கொண்ட சந்திரசேகர் காணாமல் போனதால் ரேணுகாச்சாா்யா எம்.எல்.ஏ. பெரும் துயருக்கு ஆளாகி கண்ணீர் சிந்தியதை பார்க்க முடிந்தது. மேலும் சந்திரசேகரை சிலர் கடத்தியுள்ளதாகவும், அவரை கண்டுப்பிடித்து தருவோருக்கு பரிசு வழங்கப்படுவதாகவும் ரேணுகாச்சார்யா தெரிவித்து இருந்தார். இதற்கிடையே சந்திரசேகரை தேடி கண்டுப்பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த், ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு சென்று அவரிடம் சில தகவல்களையும் பெற்றுக்கொண்டார். நேற்றும் 5-வது நாளாக சந்திரசேகரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

கால்வாய்க்குள் கார்

இந்த நிலையில் நேற்று மாலை நியாமதி- ஒன்னாளி இடைப்பட்ட பகுதியில் உள்ள கடதக்கட்டே என்னும் கிராமத்தில் ஓடும் துங்கா கால்வாயில் காரின் பாகங்கள் கிடந்துள்ளன. இந்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் தலைமையிலான போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு காரின் பாகங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் அது சந்திரசேகர் சென்ற காரின் பாகங்கள் என்பது தெரியவந்தது. மேலும் கால்வாயில் கார் விழுந்து கிடப்பது தெரிய

வந்தது. இதையடுத்து கிரேனை வரவழைத்து கால்வாயில் இருந்து காரை மேலே கொண்டு வந்தனர். அப்போது காருக்குள் அழுகிய நிலையில் சந்திரசேகர் பிணமாக கிடந்துள்ளார். இதற்கிடையே விஷயம் அறிந்து ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்தனர். அவர்கள் சந்திரசேகரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒன்னாளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தா?

சந்திரசேகரின் கார் விபத்தில் சிக்கி கால்வாயில் விழுந்ததாகவும், இதனால் காருடன் கால்வாயில் மூழ்கி சந்திரசேகர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் உண்மையான காரணம் சரிவர தெரியவில்லை. மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிார்கள்.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் தெரிவித்துள்ளார். கடந்த மாயமானதாக தேடப்பட்ட நிலையில் கால்வாயில் காருடன் அழுகிய நிலையில் ரேணுகாச்சார்யாவின் அண்ணன் மகன் சந்திரசேகர் பிணமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்